search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்ணுளி பாம்பு"

    • முத்துசாமிக்கு சொந்தமான தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
    • தனீசின் செல்போனை ஆய்வு செய்து, அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் ஒரு கும்பல் மண்ணுளி பாம்பை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக களக்காடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின்பேரில் வனசரகர் பிரபாகரன், வனவர் ஸ்டாலின் ஜெயக்குமார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் களக்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது களக்காடு-சேரன்மகாதேவி சாலையில் ஒரு காரில் சிலர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

    அவர்களை சுற்றி வளைத்து பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் வனத்துறையினரிடம் சிக்கியவர்கள் குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள கல்குளத்தை சேர்ந்த தனீஸ்(வயது 27), கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சன்னி(59), களக்காடு அருகே கீழக்கருவேலங்குளம் கரையிருப்பை சேர்ந்த முத்துசாமி(43), ஆழ்வார்குறிச்சி தொண்டர் தெருவை சேர்ந்த முருகேசன்(45), கீழப்பத்தை பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்த ஹரி என்ற ஐயப்பன்(41), கேரளா மாநிலம் எர்ணா குளம் அருகே ஹைகாட்டு காராவை சேர்ந்த அர்சத்(55) என்பதும் தெரியவந்தது.

    மேலும் தனீஸ் என்பவர் தன்னிடம் மண்ணுளி பாம்பு விற்பனைக்கு இருப்பதாக சன்னி, அர்சத் ஆகியோரை களக்காட்டிற்கு வரவழைத்ததும், அவர் வைத்திருந்த மண்ணுளி பாம்பிற்கு ரூ.10 லட்சம் வரை பேரம் பேசியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து தனீஸ், சன்னி, அர்சத், முத்துசாமி, முருகேசன், ஐயப்பன், அர்சத் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    மேலும் கீழக்கரு வேலங்குளத்தில் முத்துசாமிக்கு சொந்தமான தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 6 பேரும் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    முன்னதாக அந்த கும்பலிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், செல்போன், லேப்டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டது. அதில் தனீசின் லேப்டாப்பை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஏராளமான மண்ணுளி பாம்புகளின் புகைப்படங்கள் இருந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் தனீஷ் மற்றும் அர்சத் ஆகியோருக்கு வெளிமாநில கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து தனீசின் செல்போனை ஆய்வு செய்து, அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக களக்காடு புதுத்தெருவை சேர்ந்த அந்தோணி முத்து(41) உள்பட சிலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். அவரை கைது செய்தால் மேலும் பல உண்மைகள் வெளி வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மட்டை ராஜேந்திரன் என்பவரது வீட்டில் மண்ணுளி பாம்பு உள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • பிடிபட்ட 3 பேரிடம் பாம்பை யாருக்கு விற்க முயற்சி நடந்தது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எல்.எஸ். வீதியில் உள்ள ராஜன் என்ற மட்டை ராஜேந்திரன் என்பவரது வீட்டில் மண்ணுளி பாம்பு உள்ளதாகவும், அதனை 4 பேர் விற்க முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து வனத்துறையினர் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    வனத்துறையினர் வருவதை பார்த்ததும் 4 பேரும் தப்பி ஓடினர். அவர்களில் 3 பேரை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். பின்னர் பிடிபட்ட 3 பேரையும் காரமடை ரோட்டில் உள்ள வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சூலூர் பட்டணத்தை சேர்ந்த நாகராஜா (வயது 36), சரங்கர பாண்டியன் (41), திருப்பூரை சேர்ந்த அப்பாஸ் (43) என்பது தெரிய வந்தது.

    தப்பி ஓடிய சேலத்தை சேர்ந்த ராஜ் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். தொடர்ந்து பிடிபட்ட 3 பேரிடம் மண்ணுளி பாம்பு எங்கு உள்ளது. அதனை யாருக்கு விற்க முயற்சி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாட்டு மருந்து கடைக்காரரும், வைத்தியருமான சின்ன தம்பிராஜை வனத்துறை சட்டப்பிரிவுகளின்கீழ் போலீசார் கைது செய்தனர்
    • பாம்பினை கொண்டு புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

    கோவை,

    கோவை மருதமலை அடுத்த கோவில்மேடு பகுதியில் ஒருவர் புலித்ேதாலை பதுக்கி வைத்து இருப்பதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே போலீசார் அந்த பகுதியில் விசாரணை நடத்தினார்கள்.

    இதன் ஒரு பகுதியாக நாட்டு மருந்துக்கடை வியாபாரியும், வைத்தியருமான சின்னதம்பிராஜ் (வயது 52) என்பவரின் கடையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் அங்கு ஒரு புலித்தோல் சிக்கியது. வனத்துறை அதிகாரிகள் வைத்தியர் வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் அங்கு 3 மண்ணுளி பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவற்றில் ஒன்று ஏற்கெனவே செத்து அழுகிய நிலையில் இருந்தது. மண்ணுளி பாம்புடன் மான் கொம்பு ஒன்றும் சிக்கியது.இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் நாட்டு மருந்து வைத்தியர் சின்னதம்பிராஜிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

    அவர் போலீசாரிடம் கூறுகையில் எனது தந்தை சின்னச்சாமி நாட்டு மருந்து கடை வைத்து இருந்தார். அவருக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் மருத்துவ முறைகள் அத்துப்படி. இதன்மூலம் அவர் மருந்து தயாரித்து பலரின் நோய்களை குணப்படுத்தி உள்ளார்.

    இந்த மருந்துகள் தயாரிக்கும் முறையை அவர் எனக்கும் கற்று கொடுத்தார். அதன்படி நான் புற்றுநோய்க்கு மருந்து தயாரிப்பது என்று முடிவு செய்தேன். இதற்காக மண்ணுளி பாம்பு, மான்கொம்பு உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வந்தேன் என்றார். இதனை தொடர்ந்து நாட்டு மருந்து கடைக்காரரும், வைத்தியருமான சின்ன தம்பிராஜை வனத்துறை சட்டப்பிரிவுகளின்கீழ் போலீசார் கைது செய்தனர். சின்ன தம்பிராஜிடம் பறிமுதல் செய்யப்ப ட்டது உண்மையிலேயே புலித்தோல் தானா? என்று தெரியவில்லை. இது சென்னைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    ×